தமிழக செய்திகள்

நள்ளிரவில் ரோந்து சென்ற காவலர்களை தாக்கிய போதை ஆசாமிகள்..!

பலத்த காயமடைந்த ஊர்க்காவல் படை வீரர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அரியலூர்,

செந்துறை அருகே ரோந்து சென்ற காவலரை போதை ஆசாமிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள தளவாய் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜாகண்ணு. ஊர்க்காவல்படையில் வெங்கடேசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு ரோந்து பணிக்காக சிலப்பனூர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 3 நபர்கள் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர். அவர்களை காவலர் ராஜாக்கண்ணு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் கண்டித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது போதையில் இருந்த 3 பேரும் காவலர் ராஜாக்கண்ணு மற்றும் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனை அந்த வழியே சென்ற பொதுமக்கள் பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காயமடைந்த காவலர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த வெங்கடேசன் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் காவலர்களை தாக்கிய 3 பேரில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போதை ஆசாமிகள் காவலர்களை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT