சென்னை,
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை சந்தித்த துரை வைகோ, திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை விரைவாக தொடங்கவும், கீழக்குறிச்சி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவும், ஏர் கூரியர் கார்கோ சேவையை செயல்படுத்தவும் வலியுறுத்தினார்.
மேலும், ரேடார் அமைப்பின் இடம் மற்றும் உயரம் குறித்து தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி உறுதியளித்தார்.
இது தொடர்பாகா நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி) துரை வைகோ வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ராம்மோகன் நாயுடுவை அவரது இல்லத்தில் இன்று (04.06.2026) சந்தித்து உரையாடினேன்.
அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, விமான ஓடுதள விரிவாக்கப்பணிக்கு தேவையான 7.67 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியும் நிறைவடைந்து, இழப்பீட்டுத் தொகை வழங்குவது மட்டுமே நிலுவையில் உள்ளது. இதனை விரைவில் முடித்து ஓடுதள விரிவாக்கப் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
அப்போதே அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளை அமைச்சர் பிறப்பித்தார். அதற்கு நன்றி தெரிவித்துக்கொண்டேன்.
அத்துடன், திருச்சி பன்னாட்டு விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பகுதிக்கு அருகிலுள்ள கீழக்குறிச்சி, பகுதியில் மக்கள் பயன்படுத்தும் இணைப்புப் பாதையைப் பாதுகாக்கும் வகையில் சுரங்கப் பாதை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தேன்.
அடுத்ததாக, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சரக்கு மையத்தில் ஏர் கூரியர் கார்கோ சேவையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
இறுதியாக, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரேடார் அமைப்பு நிறுவும் திட்டம் குறித்தும் முன்மொழியப்பட்டுள்ள ரேடார் அமைப்பின் தற்போதைய இடம் மற்றும் உயரம் திருச்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு ஏற்றதாக இல்லை என்று சுட்டிக்காட்டினேன். எனவே, ரேடாரை மற்றொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவது அல்லது அதன் உயரத்தை அதிகரிப்பது குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொண்டேன்.
அனைத்து விவரங்களையும் கேட்டுக்கொண்ட மந்திரி, இந்த முக்கிய கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.