சென்னை,
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை மந்திரி ஹர்ஸ் மல்ஹோத்ராவை சந்தித்த திருச்சி எம்.பி. துரை வைகோ, திருச்சி தொகுதியின் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து கோரிக்கை மனு அளித்தார். G-Corner சந்திப்பில் ரூ.95 கோடியில் உயர்மட்ட சுழற்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்கவும், மாருதி நகர், Y ஜங்ஷன், சஞ்சீவி நகர் பகுதிகளில் வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கவும் வலியுறுத்தினார்.
மேலும், 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கருவேப்பிலான் ரெயில்வே மேம்பாலத் திட்டத்தை துரிதப்படுத்த கோரிக்கை விடுத்தார். திருச்சி–கரூர் 6 வழி பசுமை வழித்தடச் சாலை திட்டம் நிறைவேறும் வரை, தற்போதைய சாலையில் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி துரை வைகோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது;-
தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை மத்திய இணை மந்திரி ஹர்ஸ் மல்ஹோத்ராவை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன்.
அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான தேவைகளை எடுத்துரைத்து விளக்கம் அளித்தேன்.
G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற்பாலம் கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளியை இறுதிப்படுத்தி, பணிகளை விரைந்து தொடங்குதல் தொடர்பாக.
திருச்சி மாநகரின் மிக முக்கியமான 15 ஆண்டு நீண்டகாலக் கோரிக்கையான NH-38-ல் G-Corner சந்திப்பில் உயர்மட்ட சுழற்பாலம் கட்டுவதற்காக, கடந்த 20 மாதங்களாக நான் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சியின் பலனாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை (NHAI), ரெயில்வே துறை மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகத்தையும் ஒருங்கிணைத்து, இந்தத் திட்டத்தை மையப் புள்ளிக்கு நகர்த்தி உறுதிப்படுத்தினேன்.
இதன் ஒரு பகுதியாக, சுமார் 500 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான 32,415 சதுர மீட்டர் (8.01 ஏக்கர்) இரயில்வே நிலத்தை எவ்வித இழப்பீட்டுத் தொகையும் இன்றி பயன்படுத்த அனுமதி வழங்கும் No Objection Certificate (NOC) ஐ ரெயில்வே துறையிடமிருந்து தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குப் பெற்றுத் தந்தேன்.
இதைத் தொடர்ந்து, உயர்மட்ட சுழற்பாலம் அமைப்பதற்காக ரூபாய் 95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்ச் மாதம் ஒப்பந்தப்புள்ளி கோரும் பணியும் நிறைவுபெற்றுள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் காலகட்டம் காரணமாக ஒப்பந்தப்புள்ளி இறுதிசெய்யும் பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்த முக்கிய உட்கட்டமைப்புத் திட்டத்துக்கான டெண்டர் நடைமுறைகளை விரைந்து முடித்து, கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, விரைவில் நிறைவு செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
மேலும், G-Corner மட்டுமின்றி, மாருதி நகர், Y ஜங்ஷன், சஞ்சீவி நகர் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் வாகன சுரங்கப்பாதைகள் ( Vehicle Underpasses) அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தேன்.
இந்த முயற்சிகள் அனைத்தும் திருச்சியின் போக்குவரத்து நெரிசலை கணிசமாகக் குறைத்து, வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு திருச்சி மக்களின் உயிர் பாதுகாப்பையும், இந்த தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் தமிழ்நாட்டு பொதுமக்களின் பயண பாதுகாப்பை உறுதிசெய்யும்; நகரின் வளர்ச்சியை மேம்படுத்தும் என்று எடுத்துரைத்தேன்.
கருவேப்பிலான் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்பாக:
எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள கருவேப்பிலான் ரெயில்வே மேம்பாலக் கோரிக்கை, சுமார் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மிக முக்கியமான கோரிக்கையாகும். இது திருச்சி - புதுக்கோட்டை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
இந்த ரெயில்வே மேம்பாலத் திட்டம், புதுக்கோட்டை வழியாக திருச்சி முதல் காரைக்குடி வரை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த முக்கியப் பணியை துரிதப்படுத்தி, விரைவில் கருவேப்பிலான் பகுதியில் ரெயில்வே மேம்பால கட்டுமாணப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன்.
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம் குறித்து:
திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே உள்ள சாலையின் ஒருபுறம் அகல இரயில் பாதையும், மறுபுறம் காவிரி நதியும் இருப்பதால், அந்தப் பகுதியில் முழுமையான சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்வது சாத்தியமில்லை.
எனவே, 6 வழிப் பசுமை வழித்தடமாக (Greenfield Alignment) புதிய சாலையை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இனிதான் தொடங்கவுள்ளது.
இப்பகுதி முழுவதும் விவசாய நிலங்கள் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி மிகுந்த சவாலானதாகவும், நீண்ட காலம் எடுக்கக்கூடியதாகவும் இருக்கும் என நான் கருதுகிறேன்.
இத்திட்டம் நிறைவடை நீண்ட கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இடைக்கால நடவடிக்கையாக, பழைய வழித்தடத்தில் ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களில் சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இதன் மூலம், புதிய சாலை அமையும் வரை பழைய சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையவும், விபத்துகள் தடுக்கப்படவும் உயிரிழப்புகள் நிகழாதவாரு செயல்படவும் வாய்ப்பு கிடைக்கும் என்று எடுத்துரைத்தேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.