சென்னை,
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வுக்கு சீர்காழி, கடையநல்லூர், மொடக்குறிச்சி, மதுரை தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.
4 தொகுதிகளிலும் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியனிலேயே ம.தி.மு.க. வேட்பாளர்கள் செந்தில் செல்வன் (சீர்காழி), ராஜேந்திரன் (கடையநல்லூர்), செந்தில் நாதன் (மொடக்குறிச்சி), பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் களம் கண்டனர். இதில், சீர்காழி, கடையநல்லூர் தொகுதிகளில் ம.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
தற்போது, தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைத்துள்ள நிலையில், ம.தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவை கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நேற்று நன்றி சொல்ல முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் வந்தபோது, ம.தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பி.யுமான துரை வைகோ நேரில் சென்று வரவேற்றார்.
அதன்பிறகு, பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துரை வைகோ எம்.பி., "துரதிருஷ்டவசமாக தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டோம். நாங்கள் தனி இயக்கம். உதயசூரியன் சின்னத்தில் நின்றதால் எங்களால் த.வெ.க.வுக்கு ஆதரவு தர முடியவில்லை" என்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ம.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செந்தில் செல்வன் (சீர்காழி), ராஜேந்திரன் (கடையநல்லூர்) ஆகியோர் விரைவில் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் 27-ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்தும், த.வெ.க.வுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.