தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யுடன் துரை வைகோ எம்.பி. சந்திப்பு

முதல்-அமைச்சர் விஜய் இல்லத்தில், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., நேற்று திடீரென சந்தித்து பேசினார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், ம.தி.மு.க. அங்கம் வகித்ததுடன், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 சட்டமன்ற தொகுதிகளில் வென்றது. இருப்பினும், தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இதனால் அந்த கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. அந்த வகையில் ம.தி.மு.க. முதன் மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த சூழலில், சென்னை நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் இல்லத்தில், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி., நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து துரை வைகோ தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில், 'திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் வளர்ச்சி, விவசாயிகள் நலன் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி விரிவாக கலந்துரையாடினேன். என்னை அன்போடு வரவேற்று எனது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்' என்று பதிவிட்டுள்ளார்.