தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு சிம்மசொப்பனம் துரைமுருகன்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கலைஞர் வளர்த்தெடுத்த மாவீரன் துரைமுருகன் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

1965-ம் ஆண்டு இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் தளபதியாக உருவெடுத்தவர் துரைமுருகன். பொதுவாழ்வில் ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அண்ணன் துரைமுருகன். எம்.ஜி.ஆர். கண்டெடுத்து கலைஞர் கருணாநிதி வளர்த்தெடுத்த மாவீரன் துரைமுருகன்.

எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கியபோது துரைமுருகனை தனது கட்சிக்கு அழைத்தார். ஆனால் துரைமுருகனோ "நீங்கள் எனது கல்விக்கு உதவி இருக்கலாம்.. என் மீது அன்பையும், பாராட்டையும் பொழிந்திருக்கலாம்.. ஆனால் கொள்கை என்று வரும்போது, எனக்கு தலைவர் கலைஞர்தான். நான் அவருடன் தான் இருப்பேன்" என்று கூறி, இன்று வரை திமுகவில் இருக்கிறார்.

சட்டமன்றத்தில் அண்ணன் துரைமுருகனை எதிர்த்து பேசுவது என்பது அப்போது பெரிய விசயமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, அந்த ஆட்சிக்கு திமுக சார்பில் கா.சுப்பு, ரகுமான் கான், அண்ணன் துரைமுருகன் ஆகிய 3 பேர் சட்டமன்றத்தில் சிம்மசொப்பனமாக விளங்கினர். இதனால் இவர்கள் சட்டமன்றத்திற்கு வரக்கூடாது என்று எம்.ஜி.ஆர். நடவடிக்கை எடுத்தார். அப்போது கலைஞர், அந்த தண்டனையை கழகத்தினுடைய பிரசாரத்திற்காக பயன்படுத்தி இடி, மின்னல், மழை என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வந்தார்.

புள்ளி விவரங்களோடு அரசியல் மேடைகளில் பேசும் ஆற்றலை பெற்றவர் துரைமுருகன். மின்னல் என்ற தலைப்பிலே துரைமுருகன் பேசிய பேச்சுகள் தமிழ்நாட்டின் தெருக்களில் இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எதிராளிகள் கூட வியர்க்க வைக்கக்கூடிய வகையில் பேச்சாற்றல் அவருக்கு உண்டு. சிறந்த நிர்வாகியாகவும் உணர்ச்சியோடு பேசக்கூடியவராக மட்டுமல்ல நகைச்சுவை கலந்தும் பேசுவார். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT