தமிழக செய்திகள்

திமுக ஆட்சியில் விவசாயத்தை வளர்க்காமல் டாஸ்மாக்கை வளர்த்திருக்கிறார்கள் - அண்ணாமலை

கடந்த 5 ஆண்டுகளாக விவசாயமே முடங்கி போய்விட்டது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகத்தில் ஆட்சி என்ற பெயரில், கடந்த 5 ஆண்டு காலம் அராஜகம் செய்த தீயசக்தி திமுகவுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற உறுதியோடும், தமிழகத்தை மேம்படுத்திட வேண்டும் என்ற இலக்கோடும் செயல்பட்டு வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் காங்கேயம் தொகுதி வெற்றி வேட்பாளர் N.S.N. நடராஜை ஆதரித்து, இன்றைய தினம் நடைபெற்ற மாபெரும் பிரசார கூட்டத்தில் உரையாற்றினேன்.

விவசாயம் செழிப்போடு இருந்த காங்கேயம் தொகுதியில், கடந்த 5 ஆண்டுகளாக விவசாயமே முடங்கி போய்விட்டது. கடந்த ஆண்டு விவசாய வளர்ச்சி 3.5 சதவீதம் மட்டுமே. நீர்ப்பாசன வசதிகள் செய்யப்படவில்லை, மராமத்து பணிகளை செய்யவில்லை. கடைமடை பகுதிகளுக்கு நீர் கிடைக்கவில்லை. விவசாயிகளுக்காக திமுக அரசு செய்தது என்ன?

திமுக ஆட்சியில் விவசாயத்தை வளர்க்காமல், டாஸ்மாக்கை வளர்த்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில், டாஸ்மாக் மூலம் மட்டும் அரசுக்கு கிடைத்திருக்கும் வருவாய் சுமார் ரூ.2.42 லட்சம் கோடி. மதுபானங்களையும், போதைப்பொருள் புழக்கத்தையும் வளரவிட்டு வேடிக்கை பார்க்கும் திமுக ஆட்சி செய்தது போதும் என்ற முடிவிற்கு தமிழக மக்கள் வந்துவிட்டார்கள்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், காளை வளர்ப்பவர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்கள். 5 ஆண்டு ஆட்சி முடிந்தும் அதை நிறைவேற்றவில்லை. இப்படி பொய் சொல்லி ஆட்சிக்கு வரத் துடிக்கும் திமுகவை இந்த முறை விரட்டியடிக்க வேண்டும். அதற்காக தமிழக மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, வரும் 23-ம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கேயம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் N.S.N.நடராஜ் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப்போவது உறுதி. மே 4-ம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது உறுதி. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.