தமிழக செய்திகள்

தூத்துக்குடி பஜாரில் களைகட்டும் தசரா விற்பனை! வேடப்பொருட்களை போட்டி போட்டு வாங்கும் பக்தர்கள்

அனைத்து பொருட்களின் விலையும் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் உயர்ந்து உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி பஜார் கடைகளில், தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அணிவதற்கான பல்வேறு வேடப்பொருட்கள், மாலைகள் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த பொருட்களை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர்.

தசரா திருவிழா

குலசேரகன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பக்தர்கள் நாளை கோவிலில் கொடியேற்றம் நடந்தபிறகு, பல்வேறு வேடங்கள் அணிந்து வீடு, வீடாக சென்று 10 நாட்கள் காணிக்கை வசூல் செய்வார்கள். பின்னர் வருகிற 20-ந் தேதி நடைபெற உள்ள மகிசாசூரசம்ஹாரம் நாளன்று அந்த காணிக்கையை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் செலுத்தி வழிபடுவார்கள். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் வேடமணியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தசரா குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர்.

மாலைகளை விற்பனை

நாளை தசரா திருவிழா தொடங்குவதை முன்னிட்டு பக்தர்கள் அணியும் வேடப்பொருட்கள், பல்வேறு வகையான மாலைகள், ஆடைகள் போன்றவை விற்பனை நேற்று விறுவிறுப்பாக நடந்தது. தூத்துக்குடியில் விரதம் இருக்கும் பக்தர்கள் அணிந்து கொள்ளும் துளசி மாலை, சந்தன மாலை, படிக மாலை என பல்வேறு வகையான மாலைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த மாலைகள் ரூ.50 முதல் ரூ.170 வரை

விற்கப்படுகின்றன. இந்த ஆண்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பே மாலைகள் விற்பனை நன்றாக இருந்தது. கடந்த 2 நாட்களாக இந்த விற்பனை விறுவிறுப்படைந்து உள்ளது. இந்த வேடபொருட்களை பக்தர்கள் போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். இதனால் பஜார் களை கட்டியுள்ளது.

மேலும், பக்தர்கள் அணியும் காவி உடைகள் மற்றும் காளி, குரங்கு, குறவன், குறத்தி வேடமணியும் உடைகள், சடை முடிகள், காளி மண்டை ஓடு மாலை போன்ற பல்வேறு வகையான பொருட்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து பொருட்களின் விலையும் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் உயர்ந்து உள்ளன. ஆனாலும் விற்பனை கடந்த ஆண்டை விட நன்றாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT