சென்னை,
வருகிற 9-ந்தேதி நடைபெறும் தவெக கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு, அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தல், தமிழ்நாட்டில் அரசியல் களத்தையே புரட்டி போட்டது. 2-வது முறையாக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தி.மு.க.வுக்கு ஏமாற்றத்தையும், கட்சி தொடங்கிய சில ஆண்டுகளிலேயே ஆட்சியை பிடித்த த.வெ.க.வுக்கு இன்ப அதிர்ச்சியையும், அ.தி.மு.க.வுக்கு சற்று பின்னடைவையும் இந்த தேர்தல் கொடுத்தது.
இதுமட்டுமா? தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டணியில் இருந்த கட்சிகள், தேர்தலுக்கு பிறகு இன்னொரு கூட்டணிக்கு தாவி பயணித்த நிகழ்வும் அரங்கேறின. அந்த வகையில் ஆட்சி அமைப்பதற்கு உறுதுணையாக இருக்க த.வெ.க.வுடன், தி.மு.க.வில் அங்கம் வகித்து வந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுக்கரம் நீட்டின.
இதை தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கான கூட்டணியாக மட்டுமல்லாமல், அடுத்து வர இருக்கும் தேர்தல்களை சந்திக்க இருக்கும் அரசியல் கூட்டணியாகவும் வலுப்படுத்தும் நோக்கில் கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்தனர். சென்னை கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில் நடந்த இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் தலைமை தாங்கினார்.
இதில் காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முதல் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்கவில்லை. அந்த கூட்டத்தில், கூட்டணிக்கு ஒரு பொதுவான பெயர் சூட்டுவது, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இந்த நிலையில் வருகிற 9-ந்தேதி த.வெ.க. ஆதரவு கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அமைச்சர்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். சென்னை அசோக்நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்கு வருகை தந்த அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.