தமிழக செய்திகள்

ஜனநாயக கடமையாற்ற ஆர்வம்: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் பறந்து வந்த தமிழர்கள்

சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு பெரும்பாலான பயணிகள் விமானத்தில் வந்தனர்.

திருச்சி,

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வாக்களிப்பதற்காக ஒரு விமானம் முழுவதும் பயணிகள் வருகை தந்தனர். விமானி ஒருவர், விமானத்தில் இருக்கைகளில் அமர்ந்து இருந்த பயணிகளிடம் யார், யாரெல்லாம் ஓட்டு போடுவதற்காக திருச்சிக்கு செல்கிறீர்கள் என்று கேட்டார்.

உடனே, கிட்டத்தட்ட விமானத்தில் இருந்த பயணிகளில் 90 சதவீதம் பேர் கையை தூக்கினார்கள். இதை கண்டு விமானி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, அனைவரும் மறக்காமல் ஓட்டு போடுங்கள், ஓட்டு போடுவது உங்கள் உரிமை. ஆகவே உங்களுக்கு பிடித்த வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் என்று கூறி வாழ்த்தினார்.

தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக விமானத்தில் பயணிகள் சொந்த ஊருக்கு பறந்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜனநாயக கடமையாற்ற வெளிநாட்டில் இருந்து விமானத்தில் ஆர்வமாக வந்தவர்களின் இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.