ஊட்டி,
ஊட்டியில் உறைபனி தாக்கம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. கடும் குளிரால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் தொடங்கி 2 மாதங்கள் நீர்பனிப்பொழிவு இருக்கும். இதைத்தொடர்ந்து நவம்பர் இறுதி வாரம் அல்லது டிசம்பர் முதல் வாரம் முதல் உறைபனி தொடங்கும். நிலத்தின் வெப்பநிலை உறைநிலைக்கு கீழ் குறையும்போது. நீராவி பனித்துகள்களாக மாறி புல்வெளிகள் உள்ளிட்ட திறந்த வெளிப்பகுதிகளில் வெண்பனிப் போர்வை படர்ந்திருப்பது போலக் காட்சி அளிப்பதே உறைபனி ஆகும்.
இந்த உறைபனிப்பொழிவு கால நிலைக்கு ஏற்றவாறு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வரை நீடிக்கும். இந்தநிலையில் வழக்கம்போல் அக்டோபர் மாதம் ஊட்டியில் நீர்பனி தொடங்கியது. கடந்த சில தினங்களாக நீலகிரி மாவட்டத்தில் மேகமூட்டம் காரணமாக நீர் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
இந்தநிலையில், ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நன்றாக வெயில் இருந்ததால் நீர்பனி குறைந்து நேற்று காலை ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உறை பனி விழுந்தது.
நீலகிரி மாவட்டத்தின் உயரமான பகுதிகளில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை குறைந்ததால், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனி படர்ந்து காட்சியளித்தது. ஊட்டி ஏரியைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள், தலைக்குந்தா, காந்தல் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை உறைபனி காணப்பட்டது. புல்வெளிகள் மீதும் வாகனங்கள் மீதும் உறைபனி தென்பட்டது. உறைபனி தொடங்கி விட்டதால் குளிர் அதிகரித்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறியதாவது:-
கடந்த ஆண்டில் உறைபனி சீசன் தாமதமாக தொடங்கியிருந்தது. இருப்பினும் அதனை தொடர்ந்து நிலவிய கடும் குளிரால் தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகள் வெண்மையான பனிப்போர்வையால் மூடப்பட்டு சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவர்ந்தன. கடந்த சில ஆண்டுகளாக நீலகிரியில் உருவாகும் உறைபனியின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால், இந்த இயற்கை நிகழ்வை காண மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிலையில் உறை பனியில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.