சென்னை,
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக்கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இந்த வைரஸ் காங்கோவில் வேகமாக பரவி வரும் நிலையில் அந்நாட்டில் இதுவரை 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
எபோலா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் காங்கோ உள்பட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் எபோலா நோய் பரவலை, உலக சுகாதார நிறுவனம் (WHO) 'சர்வதேச கவலையளிக்கும் பொது சுகாதார அவசரநிலையாக' (PHEIC) அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்தியாவில் நோய் தடுப்பு மற்றும் தயார்நிலை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது
இந்தியாவில் நோய் பாதிப்பு அபாயம் குறைவாக இருப்பதாகக் கருதப்பட்டாலும், சர்வதேச வர்த்தகம் மற்றும் பயணங்களை கருத்தில் கொண்டு, ஆரோக்கிய அமைப்பின் அனைத்து நிலைகளிலும் போதிய தயார்நிலை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் (IDSP) கீழ், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சமீபத்தில் பயணம் செய்து வந்தவர்களிடம் காய்ச்சல், தசை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எபோலா சிகிச்சைக்காக பிரத்யேக தனிமை வார்டுகள், பிரத்யேக ஆம்புலன்ஸ்கள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சந்தேகத்திற்குரிய நபர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் மாதிரிகளைப் பரிசோதிக்க, புனேயில் உள்ள ஐ.சி.எம்.ஆர்.-தேசிய வைராலஜி நிறுவனம் (NIV) முழுமையாகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் வெப்ப பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆப்ரிக்காவில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்படுள்ளது.