சென்னை,
2 தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் 40 நட்சத்திரப் பேச்சாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் அனுமதியளித்துள்ளது. தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தொகுதிகளுக்கு அக்டோபர் மாதம் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்வதற்காக, 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை கட்சியின் தலைமை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருந்தது. இந்த பட்டியலுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த முக்கிய பட்டியலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை, தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட 40 முக்கிய நிர்வாகிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அதே நேரத்தில், அ.தி.மு.க.வின் முக்கிய மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி பெயர்கள் இடம் பெறவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும், வேலுமணி-சி.வி.சண்முகம் தரப்புக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான உட்கட்சி மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே இவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முன்னதாக இவர்களின் மாவட்டச் செயலாளர் பதவிகளும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்கள். தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு என இரு தொகுதிகளிலும் 5 முனை போட்டி நிலவுவதால், தேர்தல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது.