சென்னை,
ஆயுத பூஜையை முன்னிட்டு பஸ், ரெயில்களில் நேற்று ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னையில் வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் மற்றும் வணிகம் காரணமாக வசித்து வருபவர்கள் விழாக்காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு நேற்று முதலே செல்லத் தொடங்கி உள்ளனர். சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பெரும்பாலான மக்கள் நேற்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர்.
அதாவது, ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு பஸ்களில் பயணம் செய்ய நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணிக்கலாம் என்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இன்று (சனிக்கிழமை) சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதற்காக சுமார் 10 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) பயணம் செய்வதற்காக சுமார் 4 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே போன்று, நேற்று ஒரு நாளில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு ஆயிரத்து 626 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 85 சதவீதம் இருக்கைகள் மட்டுமே நிரம்பியதாகவும், சுமார் 65 ஆயிரம் பேர் மட்டுமே பயணித்ததாகவும் அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
எனினும், வழக்கத்தைவிட கூடுதலான மக்கள் ஒரே நேரத்தில் பயணித்ததால் கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பகுதிகளில் சாலையில் போக்குவரத்து நெருக்கடி சற்று அதிகாமாக காணப்பட்டது.
அதே நேரத்தில், ஆயுத பூஜைக்காக 2 மாதத்திற்கு முன்பாக இருந்தே ரெயில்களில் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகள் அதிகமாக காணப்பட்டதால், சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் போன்ற தென் மாவட்ட நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் செல்லும் ரெயில்களில் அனைத்துப் பெட்டிகளும் நிரம்பி வழிந்தன.
முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் காத்திருந்து, போட்டிபோட்டு உட்கார இடங்களை பிடித்தனர். அதே போன்று முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து கொண்டதால், பெண் பயணிகள் கூட பாதுகாப்பற்ற பயணத்தை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. அதாவது பெண்கள் கூட படியில் தொங்கியவாறு பயணித்ததை பார்க்க முடிந்தது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு என நேற்று ஒரு நாளில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் பயணித்திருக்கலாம் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஆக மொத்தமாக சுமார் 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் நேற்று ஒரே நாளில் மட்டும் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பஸ், ரெயில்கள் மூலம் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.