சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து, காங்கிரஸ், விசிக உள்பட பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. இதனை தொடர்ந்து தமிழக அரசியலில் தினம் தினம் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் தவெகவில் பலரும் இணைந்து வருகின்றனர்.
குறிப்பாக அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்த நிகழ்வு அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து கட்சி நிர்வாகிகள் பலரும் ராஜினாமா செய்து வரும் நிலையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் இன்று 2வது நாளாக நீடித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில் செங்கல்பட்டு, வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து 2வது நாளாக இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அதிமுகவின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்பாடு, கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.