தமிழக செய்திகள்

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

திமுக கூட்டணி கட்சிகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக அதிகரித்துள்ளது. திமுக குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ‘யார் அந்த சார்?’ என கண்டுபிடிக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான மழைநீர் வடிகால் வசதி செய்யப்படவில்லை. அதனால்தான் சென்னை மக்கள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

ஊழல் செய்வதுதான் திமுகவின் முதன்மையான வேலையாக இருக்கிறது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?. நான்கில் ஒரு பங்கு வாக்குறுதிதான் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்விக் கடன் ரத்து செய்யப்படவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை அதிகமாக போடுவதாக சொன்னார்களே போட்டார்களே?.

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பவர்களுக்கு திமுக அரசே துணை நிற்கிறது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும். திமுக ஆட்சியில் மின்கட்டணம் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுகவில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திமுக நிறுத்தி வைத்திருக்கிறது.

வீட்டுவரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் குப்பைக்கும் வரிபோட்ட ஒரே ஆட்சி திமுக தான். கருணாநிதி குடும்பம் வளமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடைபெறும் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் இந்த நாட்டுக்கு தேவையா?. திமுக கூட்டணி கட்சிகளை பார்த்தால் பரிதாபமாக உள்ளது. வரவிருக்கும் தேர்தலில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.