தமிழக செய்திகள்

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

நெல்லை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெல்லை டவுன் வாகையடி முனையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரம் செய்கிறார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இடஒதுக்கீடுகள் முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அ.தி.மு.க. 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காக 2 கட்டங் களாக 150 வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அ.தி.மு.க. போட்டியிட உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவித்து உள்ளார்.

சென்னையில் தனது பிரசார பயணத்தை தொடங்கிய அவர், தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதிக்கு வருகிறார்.

அங்கு திறந்த ஜீப்பில் நின்றவாறு நெல்லை தொகுதி வேட்பாளர் தச்சை என்.கணேசராஜா, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் சைய்யது சுல் தான் சம்சுதீன் ஆகியோரை அறிமுகம் செய்து, அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் பிரசார வேலைகளில் களம் இறங்கி மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மறுநாள் 30-ந்தேதி (திங்கட்கிழமை) எடப்பாடி பழனிசாமி தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.