சென்னை,
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். தமிழ் சமையற்கலையை உலகளவில் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செப் தாமு அவர்கள் இறப்புக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
செப் தாமு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்திருந்தார். இதனால், அவர் இறந்து விட்டதாக வதந்திகள் பரவின. இதையறிந்த செப் தாமு தான் உயிருடன் இருப்பதாகவும், கால் வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செப் தாமு உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இந்நிலையில் செப் தாமு மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரபல சமையற் கலைஞர் “பத்மஸ்ரீ” செப் தாமு (எ) தாமோதரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். செப் தாமு அவர்கள் இந்தியாவின் சிறந்த சமையற்கலைஞர்களில் ஒருவராக அறியப்பட்டவர். சமையலில் கின்னஸ் சாதனை புரிந்தவர்.
புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீதான பெரும் பற்றால் 2013-ம் ஆண்டில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டவர். எப்போதும் இன்முகத்துடன், தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகளில் தோன்றி மகிழ்வித்த அவரை தமிழக மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
செப் தாமு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சமையல் துறை மற்றும் சின்னத்திரையை சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.