“அத்தனையும் பச்சைப் பொய்..”ஜெம் வீரமணி கைது குறித்த முதல்-அமைச்சர் விஜயின் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக பிரசாரத்தில் ஈடுபட்டார். முதலில் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட எல்.எண்டத்தூரில் திரண்டிருந்த மக்களிடம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது;
இந்த தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்குத் தெரியும். பெட்டி மாறிப்போச்சு. அதனால் வந்த தேர்தல். நீங்கள் கால்கடுக்க நின்று அதிமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று வாக்களித்தீர்கள். வெற்றி பெற்றவர் உங்களுக்கு உழைக்க வேண்டும் ஆனால் அதற்கு மாறாக குதிரை பேரத்தின் வழியாக பெட்டி வாங்கினார். அவர்தான் நம்மை எதிர்த்துப் போட்டியிடுகிறார்.
நம் தொண்டர்கள், கூட்டணியினர் பாடுபட்டு, மக்கள் ஓட்டளித்து வெற்றி பெற வைத்தால், குதிரை பேரத்தில் ராஜினாமா செய்து அங்கு போய் அமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் சென்றுவிட்டனர். அவர்களுக்கு இந்த தேர்தலில் தகுந்த தண்டனை கொடுங்கள்
மக்களுக்காக உழைப்பதற்கு அதிமுக ஒரு வாய்ப்பு கொடுத்தும், அதை மதிக்காமல் சென்றுவிட்டார். ஓட்டுப்போட்ட மக்களையும் மதிக்கவில்லை, வெற்றி பெற வைத்த நிர்வாகிகளையும் மதிக்கவில்லை.
நேற்று விஜய் வீர வசனம் பேசினார், குழந்தைகளை சீரழித்தவர்களை நான் தான் கைது செய்தேன் என்றார், அது பச்சைப் பொய். ஏற்கனவே திமுக ஆட்சியில் எஃப்.ஐ.ஆர் போட்டனர். கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது, மீண்டும் ஜூலை 20 விசாரணைக்கு வந்தது, அப்போதும் தவெக அரசு வழக்கறிஞர் வாய்தா கேட்கிறார். 3-8-2026 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சொன்னபோதும் வாய்தா கேட்டனர். நீதிபதி பொறுத்துக்கொள்ள் முடியாமல் கைது செய்தாக வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்தார். அதன்பின்னர் தான் கைது செய்தனர்.
ஆக யார் காலம் தாழ்த்தியது? இரண்டரை மாதம் வாய்தா வாங்கி காப்பாற்றியது தவெக அரசு. ஆனால் பச்சை பொய் சொல்கிறார்.
மக்களிடம் அனுதாபம் பெற நிஜ வாழ்க்கையிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். கலைமாமணி பிரகாஷ் முப்பெரும் விழாவில் இரண்டு தவெக அமைச்சர்கள் கலந்துகொண்டனர். போக்சோ வழக்கில் கைதுசெய்யப்பட்ட அவருடைய நிகழ்ச்சியில் வணிகவரித்துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர் கலந்துகொண்டனர். உணவுத்துறை அமைச்சர் பேசும்போது, ’’எம்.வீரமணி எனது குடும்ப நண்பர் என்கிறார். அப்படியெனில் உண்மை வெளிவந்துவிட்டது. குற்றவாளியைப் பாதுகாக்கும் ஆட்சி இது. வேறொரு கட்சி மீது பழியை சுமத்தி இந்த ஆட்சியில் தான் பாதுகாப்பு இருப்பதுபோல அனுதாபம் தேடி பச்சை பொய் சொல்வது வரலாற்றில் இதுதான் முதல்முறை.
தவெக நிறைய அறிவிப்பு கொடுத்தது, எதுவும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் 31 ஆண்டுகாலத்தில் நிறைய திட்டங்கள் கொடுத்தோம். உங்கள் ஆட்சியில் ஒரு திட்டமாவது சொல்ல முடியுமா? பெரிய திட்டம் எதுவுமில்லை.
வாக்குறுதி கொடுத்தார், உரிமைத் தொகை 2500 ரூபாய் என்று சொல்லி கொடுக்கவில்லை, முதியோர் உதவித்தொகை உயர்த்தவில்லை. வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம், விசைத்தறி கைத்தறி ஆண்டுக்கு 30 ஆயிரம் எல்லாம் கொடுப்பதாகச் சொன்னார். எதுவும் இல்லை. சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்?
2 லட்சத்து 48 ஆயிரம் கோடி மின்சாரத்துறையில் கடன், 72 ஆயிரம் கோடி போக்குவரத்து துறையில் கடன், 10 லட்சம் கோடி தமிழகத்துக்கு கடன். துட்டு இருந்தால்தான் செய்ய முடியும். திமுக அரசு கஜானாவை காலிசெய்துவிட்டு சென்றது, இந்த அரசும் கஜானாவை காலிசெய்ய இந்தாண்டு ஒன்றரை லட்சம் கோடி கடன் வாங்குகிறார்கள். 4 மாதத்தில் 40 ஆயிரம் கோடி வாங்கிவிட்டனர். கடனெல்லாம் உங்கள் தலையில் தான் விடியும்.
லண்டன் பயணம் எதுக்குப் போனார் என்று உங்களுக்குத் தெரியும். முதலீடு ஈர்க்க போகிறார் என்று சொன்னார்கள். ஆனால், அங்கு போனதும் முதலில் ஒரு படம் வந்தது, அது என்னவென்று உங்களுக்கு தெரியும்.
முதல்-அமைச்சருக்கான அறை போதவில்லையாம், கடல் காற்று நேரடியாக பட வேண்டுமாம். அதனால் நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஒரு அறை தயார் செய்கிறார்கள். இதுக்கு 10 கோடி செலவு. இப்படிப்பட்ட காஸ்ட்லி முதல்-அமைச்சர் தேவையா? அண்ணா முதல் ஸ்டாலின் வரை எல்லோரும் பணியாற்றிய அறை அது.
. ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏவை ராஜினாமா செய்யவைத்து வெற்றி பெற வைக்கத் துடிக்கிறார். அவருக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள். நம் வேட்பாளர் கணிதா சம்பத்துக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.