தமிழக செய்திகள்

எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக வேண்டும்: புகழேந்தி பேட்டி

திருமாவளவனின் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது என்று புகழேந்தி கூறினார்.

ஈரோடு,

ஈரோட்டில், புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புகழேந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் தமிழில் பேசி புரட்சியை ஏற்படுத்தியவர் வி.சி.க. தலைவர் திருமாவளவன். அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கண்ணியமிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ள சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி உரிய சட்ட மன்ற எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எங்களை பண்போடு வளர்த்தார்கள். இறந்தவர்கள் குறித்து பேசக்கூடாது. ஆனால் கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்ததாக எடப்பாடி பழனிசாமி தேவையில்லாமல் பேசியிருக் கிறார்.

தி.மு.க. கூட்டணி கட்சிகள் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும். எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கும், அவருடைய கட்சியில் உள்ளவர்களுக்கும் நம்பிக்கை இல்லை. அதனால் 90 சதவீத இடங்களில் அ.தி.மு.க. டெபாசிட் இழக்கும். என்னை பொறுத்தவரை என்.டி.ஏ. கூட்டணி தோல்வி அடைய வேண்டும். எடப்பாடி பழனிசாமி அரசியலை விட்டு விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.