தமிழக செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும், பணிபுரியும் இந்தியர்கள், தமிழக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

ஈரான் ஆட்சியாளர் காமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். இதனை முதலில் மறுத்த ஈரான் அதன்பிறகு ஒப்புக்கொண்டது. காமேனி மறைவுக்கு 40 நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.

மேலும் ஈரான் மீதான இஸ்ரேல், அமெரிக்காவின் கூட்டுத்தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என அந்நாட்டு அமைச்சரவை அறிவித்துள்ளது.

காமேனியின் கொலைக்கு காரணமானவர்கள் கொடூரமாக தண்டிக்கப்படுவார்கள், வரலாற்றிலேயே மிக மோசமான தாக்குதல் நடவடிக்கை எந்த நேரத்திலும் தொடங்கும் என ஈரான் காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் வளைகுடா நாடுகள் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம் இந்தியர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அங்கு வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.