தமிழக செய்திகள்

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தை காலி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி

கடந்த 15 ஆண்டுகளாக அரசு இல்லத்தில் வசித்து வந்த எடப்பாடி பழனிசாமி அந்த வீட்டை காலி செய்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள செவ்வந்தி என்ற அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். கடந்தமுறை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பில் இருந்ததால் அரசு இல்லத்திலேயே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தங்கி இருந்தார். இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது.

எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்தார். இதையடுத்து, அரசு இல்லத்தை காலி செய்ய எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். இதன்படி, ராயப்பேட்டையில் உள்ள புதிய வீட்டில் எடப்பாடி பழனிசாமி குடியேற உள்ளார். சுபமுகூர்த்தம் என்பதால் இன்று ராயப்பேட்டையில் உள்ள பங்களா வீட்டில் பால் காய்ச்சும் பணி நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி குடியேற உள்ள புதிய வீடு பிரபல தொழில் அதிபர் ஒருவருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. ராயப்பேட்டையில் அதிமுக கட்சி அலுவலகம் அருகிலேயே உள்ள தெய்வசிகாமணி சாலையில் எடப்பாடி பழனிசாமி குடியேற இருக்கும் புதிய வீடு அமைந்துள்ளது.