சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. குற்ற சம்பவங்கள் நடைபெற்ற உடனே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பான அனைத்து விஷயங்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியால் 80% விவசாயிகள் பலன் பெற்றுள்ளனர்.
திமுக தூண்டுதலின் பேரில் ஒரு சில இடங்களில் பயிர் கடன் தொடர்பாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் நலனுக்காக முதல்-அமைச்சர் விஜய் நாள்தோறும் போராடி வருகிறார். பயிர் கடன் தொடர்பாக அரசாணை விரைவில் வெளியிடப்படும். வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அப்போது நேரம் கேட்கப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக சந்திக்க வேண்டாம் என ஈபிஎஸ் கூறிவிட்டார். அரசியல் சூழல் கருதி, ஒரு சிலர் சந்திப்பது சரியாக இருக்காது என கூறினர். முதலமைச்சர் விஜய் அடிக்கடி மக்களை சந்திப்பார்.
அதிமுகவை காலி செய்தது எடப்பாடி பழனிசாமி தான். திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சித்தனர். திமுகவுக்கு எதிராக நிற்கக்கூடிய கட்சி தவெக. டிடிவி தினகரன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர் அரசியலை விட்டு ஒதுங்கி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.