சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அண்ணன் எடப்பாடி பழனிசாமிக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் எடப்பாடி பழனிசாமி, நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று 72-ம் பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி பழனிசாமி உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து பொதுவாழ்வுப் பணியாற்ற எனது வாழ்த்துகள்!" என்று தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சருமான அன்பிற்குரிய சகோதரர் எடப்பாடி K பழனிசாமிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதரர் எடப்பாடி K பழனிசாமி நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் தனது மக்கள் பணியைத் தொடர வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.