சென்னை,
சட்டமன்ற தேர்தலில் அதிமுக குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்காமல் போனது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களுமான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், டாக்டர் சி.விஜய்பாஸ்கர் உள்ளிட்ட 25 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நிலைப்பாடுகளை கையில் எடுத்து வருகின்றனர்.
அதன் எதிரொலியாகத்தான் நேற்று முன்தினம் சட்டசபையில் புதிய அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கு எதிராக 25 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்தனர். கட்சி கொறடாவின் உத்தரவையும் மீறி வாக்களித்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சபாநாயகரிடம், அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மனு அளித்தனர்.
இதனை தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இல்லத்தில், எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார் உள்பட பலருடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு சென்றனர். கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இல்லாததால், கவர்னரின் செயலாளரிடம் மனு கொடுத்து திரும்பினர்.
இந்த நிலையில், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் தற்போது கேரளாவில் இருப்பதால் சென்னை வந்ததும் அவரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளது. மேலும் சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மாநிலங்களவை எம்.பி.க்கள் இன்பதுரை, தனபால் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர். மேலும் வழக்கறிஞர்களுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு திடீர் ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்று வரை எஸ்.பி.வேலுமணியுடன் இருந்தேன்; இன்று எனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன் என கே.சி.வீரமணி கூறியுள்ளார்.
இதற்கிடையில், சட்டமன்ற கொறடா விவகாரம் குறித்து சி.வி.சண்முகம் அலுவலகத்தில் எஸ்.பி.வேலுமணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.