வேலூர்,
வேலூர் மாவட்டம் விருதம்பட்டு பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்) இயங்கி வருகிறது. இங்கு அலுவலக கண்காணிப்பாளராக செந்தில்குமார் (56 வயது) என்பவர் பணியாற்றி வந்தார்.
தனியார் பள்ளிகளின் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய நிலையில், காட்பாடியை அடுத்த பரதராமி பகுதியை சேர்ந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் உரிமத்தை புதுப்பிக்க அப்பள்ளி நிர்வாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணப்பித்து உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரை உரிமம் புதுப்பிக்கப்படாததால் அப்பள்ளியின் தாளாளர் தேவராஜூலு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் வந்து கேட்டுள்ளார்.
அப்போது கண்காணிப்பாளர் செந்தில்குமார், உரிமத்தை புதுப்பிக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தேவராஜூலு இதுகுறித்து வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மைதிலியிடம் புகார் தெரிவித்துள்ளார். போலீசாரின் அறிவுரையின் பேரில் தேவராஜூலு ரசாயன பவுடர் தடவிய ரூ.25 ஆயிரத்தை நேற்று மதியம் விருதம்பட்டு தனியார் மருத்துவமனை அருகே உள்ள இடத்தில் செந்தில்குமாரிடம் கொடுத்தார்.
அப்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்துடன் செந்தில்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.