தமிழக செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 25 காசுகள் சரிவு

முட்டை விலை மேலும் விலை குறைய வாய்ப்புகள் உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 25 காசுகள் சரிந்து கொள்முதல் விலை ரூ.6.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முட்டை விலை

நாமக்கல் மண்டலத்தில் தினமும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. இந்த முட்டைக ளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு (என்.இ.சி.சி.) விலையை நிர்ணயம் செய்கிறது.

இந்த நிலையில் நேற்று மாலை நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடந்தது. இதில் முட்டையின் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.6.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.92-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.4 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.88 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறைய வாய்ப்பு

கடந்த மாதம் 29-ந் தேதி முட்டை விலை ரூ.5.70 ஆக இருந்தது. பின்னர் 8 நாட்களில் ஒரு ரூபாய் உயர்ந்தது. கடந்த 6-ந் தேதி முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.70 ஆக இருந்த நிலையில், கடந்த 11-ந் தேதி 20 காசுகள் குறைந்தன. நேற்று 25 காசுகள் குறைந்து முட்டையின் கொள்முதல் விலை ரூ.6.25 ஆக உள்ளது.

கார்த்திகை மாதம் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பிறக்கிறது. கார்த்திகை 1-ந் தேதி அய்யப்ப பக்தர்களும், முருக பக்தர்கள் ஏராளமானோர் மாலை போட்டு விரதத்தை தொடங்குவார்கள். எனவே இந்த நாட்களில் முட்டை நுகர்வு குறைவாக இருக்கலாம் என்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புகள் உள்ளன.

SCROLL FOR NEXT