தமிழக செய்திகள்

புதிய உச்சத்தை தொட்ட முட்டை விலை!

சில்லறை விற்பனையில் முட்டை விலை 8 ரூபாயை தொட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

5 காசுகள் உயர்வு

இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கொள்முதல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி, நேற்று முட்டை விலை 650 காசுகளாக (ரூ.6.50) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 655 காசுகளாக (ரூ.6.55) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் சில்லறை விற்பனையில் முட்டை விலை 8 ரூபாயை தொட்டுள்ளது.