மதுரை,
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் நேற்று கத்தரிக்காய் விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.
தென்மாவட்டங்களில் முக்கிய மார்க்கெட்டாக மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் விளங்குகிறது. இங்கு வெளிமாவட்டங்கள் மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் டன் கணக்கில் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. மதுரையை சுற்றியுள்ள சிறுசிறு வியாபாரிகள் கடைகளுக்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் வாங்கி செல்வார்கள். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக சின்ன வெங்காயத்தின் வரத்து குறைவாக உள்ளது. கடந்த சில வாரமாக வரத்து குறைவு மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக கிலோ ரூ.150 வரை விற்பனையானது. சின்ன சின்ன கடைகளில் ரூ.160 வரை விற்றது.
கத்தரிக்காய் வரத்து குறைந்து விலை உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது. தக்காளி விலையும் விலை உயர்ந்து 15 கிலோ பெட்டி ரூ.250 முதல் ரூ.500 வரை விற்றது. சில்லரை விலையில் கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரை விற்றது.
மற்ற காய்கறிகளின் விலை விவரம் (கிலோ கணக்கில்) வருமாறு: முருங்கைக்காய் ரூ.70 முதல் ரூ.100, எலுமிச்சை ரூ.200 முதல் ரூ.250, பெரிய வெங்காயம ரூ.60 முதல் ரூ.80, உருளை ரூ.30 முதல் ரூ.70. வெண்டை ரூ.30 முதல் ரூ.50, கருணை ரூ.60 முதல் ரூ.80, கேரட் ரூ.20 முதல் ரூ.40, பீட்ரூட் ரூ.40 முதல் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.20 முதல் ரூ.30, இஞ்சி (பழையது) ரூ.200, புதியது ரூ.100, பச்சைப்பட்டாணி ரூ.250, கொடை மிளகாய் ரூ.60 முதல் ரூ.80, சம்பா மிளகாய் ரூ.40 முதல் ரூ.60, சின்ன பாகற்காய் ரூ.200, பெரிய பாகற்காய் ரூ.50 முதல் ரூ.60, மாங்காய் (நாடு) ரூ.50, கல்லாமை ரூ.80, கருவேப்பிலை ரூ.50, புதினா ரூ.60, கொத்தமல்லி விலை உயர்ந்து ரூ.100 முதல் ரூ.150, பீர்க்கங்காய் ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.