தமிழக செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: அடுத்த மாதம் முதல் சில ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டம்

மின்சார ரெயில்களை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை,

எழும்பூர் ரெயில் நிலையத்தில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுசீரமைப்பு பணி

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.840 கோடியில் மறு சீரமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. இதற்காக அவ்வப்போது ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே எழும்பூரில் இருந்து இயக்கப்பட்ட சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப் படுகின்றன.

இரும்பு நடைமேம்பாலம்

இந்தநிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்தில் தற்போது இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 500 டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு இரும்பு ராடர்கள் பாலமாக நிறுவப்படுகிறது. இந்த பாலம் 18 மீட்டர் அகலத்துடனும், 120 மீட்டர் நீளத்துடனும் அமைய உள்ளது. தற்போது காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, எழும்பூர் ரெயில் நிலைய 6-வது நடைமேடையில் இருந்து மின்சார ரெயில் இயக்கப்படும் நடைமேடைகளான 10 மற்றும் 11 வரையில் இரும்பு நடை மேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதனால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

தாம்பரத்தில் இருந்து...

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, 'நடை மேம்பாலம் அமைக்கும் பணி காரணமாக எழும்பூரில் இருந்து இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும், மின்சார ரெயில்களை நடைமேடை 5 மற்றும் 6-ல் இருந்து இயக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடை மேம்பாலம் அமைக்கும் பணி அடுத்த மாதம் முதல் அல்லது 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. அப்போது, இந்த மாற்றங்களை நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது' என்றனர்.