சென்னை,
சென்னையில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி பூட்டிய வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் சரவணப் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர்கள் தன்ராஜ் (வயது 78) மற்றும் அவரது மனைவி சந்திரா (வயது 72). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. முன்பு நகைப்பட்டறை நடத்தி வந்த தன்ராஜ், வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக படுக்கையில் இருந்துள்ளார். எனவே, அவரை மனைவி சந்திரா கவனித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இவர்களது வீட்டின் கதவு பூட்டியே கிடந்துள்ளது. இதையடுத்து கடந்த (வியாழக்கிழமை) அன்று காலை சந்திரா அருகிலுள்ள தேநீர்க்கடைக்கு சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு இருவரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில், கடந்த (சனிக்கிழமை) இரவு வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தன்ராஜ் மற்றும் சந்திரா இருவரும் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்தனர். உடனடியாக இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தன்ராஜ் சில நாட்களுக்கு முன்பே உயிரிழந்திருக்கலாம் என்றும், கணவர் இறந்த அதிர்ச்சி மற்றும் தனிமையில் இருந்த சந்திரா, அவரது உடலுடன் சில நாட்கள் இருந்துவிட்டு பின்னர் அவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.