திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று அரசுப் பேருந்து மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் இருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) பழவேற்காடு நோக்கி மாநகரப் பேருந்து (வெற்றிப் பயணம் பேருந்து) சென்று கொண்டிருந்தது. பொன்னேரி அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையைக் கடக்க முயன்ற நடராஜன் (வயது 84) என்ற முதியவர் மீது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், அப்பகுதியில் உள்ள மோசமான சாலை நிலைமைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.