தூத்துக்குடி,
மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், கீழ ஈரல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே நேற்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கனரக வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து அங்கே வந்த எட்டயபுரம் போலீசார், உடலைக் கைப்பற்றி அரசு ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த நபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விபரங்கள் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்ற வாகனம் மற்றும் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.