தமிழக செய்திகள்

திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த முதியவருக்கு 3 மனைவிகள், 5 பிள்ளைகள் இருந்தபோதும், அவர்கள் யாரும் தனக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக போலீஸ் நிலையத்தில் முதியவர் புகார் செய்தார்.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் தீக்குளித்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீஸ் நிலையத்தில் புகார்

சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 67). இவருக்கு உஷா, பாரதி, மாரி ஆகிய 3 மனைவிகளும், 5 பிள்ளைகளும் உள்ளனர். ஆனாலும் இவர்கள் யாரும் தனக்கு உணவு, தண்ணீர் கொடுத்து கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டி விட்டதாக நேற்று முன்தினம் மதியம் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

தீக்குளித்த முதியவர் உயிரிழப்பு

பின்னர் திடீரென போலீஸ் நிலைய வளாகத்தில் அவர் தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது உடலில் எரிந்த தீயை அணைத்து, அவரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.