தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஆவல்நத்தம், மேலத் தெருவைச் சேர்ந்த அய்யாசாமி மகன் மாரிமுத்து (வயது 61). இவர் தனது பைக்கில் ஆவல்நத்தம் சந்திப்பு பகுதியில் நான்கு வழிச்சாலையை குறுக்காகக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, கங்கைகொண்டானில் இருந்து அருப்புக்கோட்டைக்கு சோலார் பொருட்களை ஏற்றுவதற்காக கோவில்பட்டி வழியாக வந்து கொண்டிருந்த லாரி அவரது வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாரிமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக லாரியை ஒட்டி வந்த தூத்துக்குடி, முத்தையாபுரம் 5-வது தெருவைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் செல்வகுமார்(32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.