தமிழக செய்திகள்

"மீண்டும் மீண்டுமா..?"- சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த முதியவர் தப்பி ஓட்டம்

மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து டேவிட் தப்பியதாக கூறப்படுகிறது.

சென்னை,

சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த முதியவர் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோவை கைதி

கோவை சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக நேற்று (30.10.2026) சுமார் இரவு 11 மணியளவில், ராகவன் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபர் கோவை விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில் இன்று (31.10.2026) அதிகாலை 12.40 மணியளவில், அவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காவலர்களைத் தள்ளிவிட்டு காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிச் சென்றார்.

6 தனிப்படைகள்

உடனடியாக, கோவை மாநகர காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் பணியினருடன் ஒருங்கிணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. டிரோன் கண்காணிப்பு, சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு மற்றும் தீவிர வாகனச் சோதனைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் கோவையில் தப்பிய கைதி ராகவனை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த அதிர்ச்சி சம்பவமாக சென்னை கொளத்தூரில் காவல்துறை பாதுகாப்பில் இருந்த முதியவர் தப்பி ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மீண்டும்.. மீண்டுமா..?

புழல் அருகே பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் ஆட்டோ ஓட்டுநரான டேவிட் (60) என்பவர் மீது சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சிறுமிகளின் பெற்றோர் டேவிட்டை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் பரிசோதனைக்காக கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரின் பிடியில் இருந்து டேவிட் தப்பியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், “மீண்டும்.. மீண்டுமா..?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

SCROLL FOR NEXT