தமிழக செய்திகள்

நிலத்தகராறில் முதியவர் கொலை: இந்து முன்னணி நிர்வாகி கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலப்பிரச்சினை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் தாலுகா, வடக்கு ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 70). இவருக்கும் இவரது உறவினரான இந்து முன்னணி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் செல்லத்துரை(55) என்பவருக்கும் இடையே 50 சென்ட் நிலம் தொடர்பாகப் பிரச்சினை இருந்து வந்தது.

வாக்குவாதம்

அந்த இடத்தில் வேலுச்சாமி நில அளவீடு செய்யாமல் வீடு கட்ட முயன்றதைச் செல்லத்துரை கடந்த 6 மாதங்களாக தடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி வேலுச்சாமி ஆட்களை வைத்து வீட்டுக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். அங்கு வந்த செல்லத்துரை அதைத் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

முதியவர் தலையில் காயம்

இதில் ஆத்திரமடைந்த இருதரப்பினரும் இரும்பு பைப் மற்றும் ஊன்றுகோலால் ஒருவரையொருவர் மாற்றி மாற்றித் தாக்கிக்கொண்டனர். செல்லத்துரை ஊன்றுகோலால் தாக்கியதில் வேலுச்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

முதியவர் உயிரிழப்பு, இந்து முன்னணி நிர்வாகி கைது

அங்கே சிகிச்சை பெற்று வந்த வேலுச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முன்னதாக, வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில் கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்ட செல்லத்துரையை, முதியவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் கைது செய்தனர்.