தமிழக செய்திகள்

சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவர்கள்: அதிர்ச்சி சம்பவம்

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 முதியவர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்,

சிறுமிக்கு பாலியல் தொல்லை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவள் மூன்றரை வயது சிறுமி. இவள் நேற்று காலை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அறிந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவரை குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்டவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதே பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது 59) என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

12 வயது சிறுமி

இதேபோல், குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவள் 12 வயது சிறுமி. நேற்று முன்தினம் இந்த சிறுமி தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் அந்த சிறுமியிடம் ஐஸ்கிரீம் வாங்கி கொடுப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தார். இதை அறிந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து குமாரபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர் அதே பகுதியை சேர்ந்த மணி (62) என்று தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பொதுமக்கள் போராட்டம்

இந்த 2 சம்பவங்களை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசத்தை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.

இதனிடையே குமாரபாளையத்தில் பள்ளிபாளையம் பிரிவு சாலை, குமாரபாளையம் போலீஸ் நிலையம் முன்புறம் என 2 இடங்களில் மீண்டும் சிறுமியின் உறவினர்கள் சுமார் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை அறிந்த சேலம் சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சாமிநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விமலா (நாமக்கல்), மற்றும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

போலீசார் விளக்கம்

இந்நிலையில் இந்த பாலியல் சீண்டல் சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அதில், 2 சிறுமிகளும் ஒரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என்பது போன்ற செய்தி தவறான தகவலாகும். 2 சம்பவங்களும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தனித்தனியான சம்பவங்களாகும்.

இரு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 13 வயது சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 வயது சிறுமியை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தியதாக மற்றொரு நபர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரு வழக்குகளிலும் போலீசார் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கடும் தண்டனை பெற்றுத்தர தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.