தூத்துக்குடி,
ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பகுதியில் பெய்த திடீர் மழையால், இந்திய தொல்லியல் துறை சார்பில் கண்டெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க முதுமக்கள் தாழிகள் மற்றும் தொல்பொருட்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிக முக்கியமான தொல்லியல் தளம் அமைந்துள்ளது. இங்கு இந்திய தொல்லியல் துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இதில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை அதே இடத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில், இந்தியாவின் முதல் 'சைட் மியூசியம்' அமைக்கப்பட்டது. கடந்த 2023 ஆகஸ்ட் 6-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதைத் திறந்து வைத்து, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
அகழாய்வுப் பகுதிகளை A, B, C என மூன்று பிரிவுகளாகப் பிரித்து ‘C’ தளத்தில் தற்காலிக கூரைகள் அமைத்து அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிக அளவிலான தொல்பொருட்கள் கிடைத்த இப்பகுதியில் நிரந்தர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும், அவை மிகவும் மந்தகதியிலேயே நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகழாய்வுக் குழிகளுக்குள் மழைநீர் பெருக்கெடுத்து தேங்கியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தண்ணீரில் மூழ்கி அவற்றுக்குள் இருக்கும் வரலாற்று தொல்பொருட்கள் சேதமடைந்து வருகின்றன.
இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறுகையில், "முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட தொல்பொருட்களை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுள்ளதால், அவை வெயிலிலும், மழையிலும் சேதமடைந்து வருகின்றன. வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை, தீவிரமடைவதற்கு முன் இந்திய தொல்லியல் துறை இதில் கவனம் செலுத்தி, நிரந்தர ஷெட் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து தொல்பொருட்களை பாதுகாக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.