திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நடந்த இரட்டைக் கொலை மற்றும் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த நபரின் தாய் மரணம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரும்பத்து கிராமத்தில் 2.3.2026 அன்று நடைபெற்ற சம்பவத்தில் காயமடைந்த நெல்சன் (வயது 55) என்பவர் 2.3.2026 முதல் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது தாயார் ராஜம்மாள்(80), முதிய வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனது மற்றொரு மகன் வில்சன் உடன் களக்காடு பகுதியில் வசித்து வந்தார். அவர் 6.3.2026 அன்று முதிய வயது காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சினைகளால் இயற்கை எய்தினார்.
அவரது உடல் சொந்த ஊரான பெரும்பத்து கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு, குடும்பத்தினரால் நேற்று இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. எனவே பெரும்பத்து சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது துயரம் காரணமாக அவர் உயிரிழந்ததாக சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானதும் ஆதாரமற்றதும் ஆகும். அவர் முதிய வயது மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.