தமிழக செய்திகள்

நகைக்காக மூதாட்டி கொலை - கொள்ளையடித்த பணத்தில் மனைவியுடன் சுற்றுலா சென்ற தொழிலாளி கைது!

கொள்ளையடித்த நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்ற அவர் அங்கு ஒரு நகைக்கடையில் ரூ.2 லட்சத்துக்கு நகை விற்றுள்ளார்.

கோவை,

கோவை ராமநாதபுரம் சுங்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் 2-வது தளத்தில் கோமதி (வயது 69) என்பவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் தங்கராஜ் பத்திரப்பதிவு துறையில் துணை பத்திரப்பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். இங்கு கோமதி மட்டும் தனியாக இருந்தார். கோமதி கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக, தனது மகள் ராதிகாவை உதவிக்கு அழைத்தார். கடந்த 3-ந் தேதி ராதிகா தனது தாயாரை பார்க்க கோவைக்கு வந்தார். வீட்டுக்கு சென்று பார்த்த போது, அறைக்குள் கோமதி பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியான அவர் சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மூதாட்டி அணிந்திருந்த நகை, செல்போன் கொள்ளை போயிருந்தது. இதனால் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மூதாட்டியை கொன்ற நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டும், அக்கம்பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது வாலிபர் ஒருவர் மூதாட்டியின் துணிகளை சலவை செய்ய எடுத்து செல்ல அடிக்கடி வந்தது தெரியவந்தது. அவர் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(24) என்பதும் சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும், தற்போது அவர் தலைமறைவாகிவிட்டதும் தெரியவந்தது. தனிப்படை போலீசார் அவர் எங்கிருக்கிறார் என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டபோது ரஞ்சித்குமார் தனது மனைவியுடன் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. கைதான ரஞ்சித்குமாரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள மாத்தூர். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர் தனது மனைவியுடன் ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் வாடகை வீட்டில் தங்கி சலவை தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்போது கோமதியின் துணிகளை சலவை செய்து கொடுக்க அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ரஞ்சித்குமாருக்கு செலவுக்கு அதிகமாக பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது தனியாக இருந்த மூதாட்டி கோமதியிடம் நகைகள் இருப்பதை அறிந்த அதனை பறிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி சம்பவத்தன்று துணி எடுக்க செல்வது போல் கோமதியின் வீட்டிற்கு சென்ற அவர், மூதாட்டியிடம் நகையை பறித்துள்ளார். அப்போது அவர் கூச்சலிடவே, ரஞ்சித்குமார். மூதாட்டியை கழுத்தை இறுக்கி கொன்றுள்ளார். அதன்பின்னர் மூதாட்டி அணிந்திருந்த நகைகள் மற்றும் செல்போன்களை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். போகும் வழியில் செல்போன்களை சாக்கடையில் வீசி சென்றதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையடித்த நகைகளுடன் சொந்த ஊருக்கு சென்ற அவர் அங்கு ஒரு நகைக்கடையில் ரூ.2 லட்சத்துக்கு நகை விற்றுள்ளார். பின்னர், அந்த பணத்தை எடுத்து கொண்டு தனது மனைவியுடன் ராமேசுவரத்துக்கு சுற்றுலா சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். அவரிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மூதாட்டியை கொன்று. நகையை கொள்ளையடித்து அந்த பணத்தில் சலவை தொழிலாளி தனது மனைவியுடன் சுற்றுலா சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.