கோவை,
கோவை மாவட்டம் குனியமுத்தூரில் 2 சவரன் தங்க நகைக்காக மூதாட்டியை கொடூரமான முறையில் கொலை செய்த இட்லி கடை பெண் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி என்ற மூதாட்டி. இவர் கடந்த 15-ந்தேதி அவரது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூதாட்டி அணிந்திருந்த 2 சவரன் தங்க நகைகளைத் திருடுவதற்காகவே இந்த கொலை அரங்கேறியுள்ளது தெரியவந்தது. சம்பவத்தன்று நகையைப் பறிக்க முயன்றபோது, மூதாட்டி சத்தம் போடாமல் இருக்க கொலையாளி அவரது வாயை பலமாக மூடியுள்ளார். இதில் மூச்சுத்திணறி மூதாட்டி விஜயலட்சுமி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கொலை நடந்த இடத்தில் போலீசார் தடயங்களைச் சேகரித்தபோது, மூதாட்டியின் சடலத்திற்கு அருகே சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் சிக்கின. இது கொலையாளி ஒரு பெண்ணாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை போலீசாருக்கு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அப்பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண் ஒருவருக்கு இக்கொலையில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த அந்த இட்லி கடை பெண் உரிமையாளரை குனியமுத்தூர் தனிப்படை போலீசார் இன்று (புதன்கிழமை) கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.