தமிழக செய்திகள்

நெல்லையில் 100 அடி நீள துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்

ஏர்வாடி பகுதியில் 107 வயதான செல்லம்மாள், 102 வயதான மேரி பாய் ஆகியோரின் இல்லங்களுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்று தேர்தல் நாள் அழைப்பிதழுடன் வாக்காளர் சீர்வரிசை தட்டு வழங்கினர்.

திருநெல்வேலி,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சுகுமார் தலைமையில், வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அருகே பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சிவராம் ஓவியக் கலைக்கூடத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, 100 அடி நீள வெள்ளை நிற துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

"வாக்களிப்பது நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை" என்ற வாசகங்களுடன், 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. திருநெல்வேலியின் பாரம்பரியச் சிறப்பான பத்தமடை பாயில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து கவனத்தை ஈர்த்தனர்.

இதனை தொடர்ந்து வரையப்பட்ட ஓவியங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்தனர். பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

100 வயதை கடந்த வாக்காளர்கள்:

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 107 வயதான செல்லம்மாள் மற்றும் 102 வயதான மேரி பாய் ஆகியோரின் இல்லங்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்றனர்.

அவர்களுக்கு தேர்தல் நாள் அழைப்பிதழுடன், 'வாக்காளர் சீர்வரிசை' தட்டு மற்றும் விழிப்புணர்வுப் பதாகைகளை வழங்கி, ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதில் சமூக நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுக்கு தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.