தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

இந்த வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

முதல்-அமைச்சர் விஜய்க்கு எதிரான தேர்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர், வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை நிராகரிக்கக்கோரி முதல்-அமைச்சர் விஜய் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று தொடங்கியது. அப்போது, விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், சட்ட ஆணைய பரிந்துரைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

மீண்டும் விசாரணை

மேலும், வேட்புமனுவில் முதல்-அமைச்சர் விஜய் தனது சொத்து விவரங்களை முழுமையாக தெரிவிக்கவில்லை என தேர்தல் வழக்குகளின் மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. விஜய் தரப்பு வாதம் முடிவடையாததால். இந்த வழக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

SCROLL FOR NEXT