தமிழக செய்திகள்

தேர்தல் வழக்கு: முதல்-அமைச்சர் விஜய் பதிலளிக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட்டு எச்சரிக்கை

முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டன.

சென்னை,

தேர்தல் வழக்கு

பெரம்பூர் தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அதேபோல, வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோரும் முதல்-அமைச்சர் விஜய்யின் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதைபோல திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் தேர்தல் வழக்கை தாக்கல் செய்தார். இந்த தேர்தல் வழக்குகள் அனைத்தும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் அமர்வில் விசாரணையில் உள்ளன. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், முதல்-அமைச்சர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

ரூ.50 ஆயிரம் அபராதம்

இந்த நிலையில், இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என, முதல்வர் விஜய் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி, “மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி, தேர்தல் வழக்குகளை 6 மாதத்துக்குள் முடிக்க வேண்டியுள்ளது.

கடந்த முறையே வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட மாட்டாது என கூறியிருந்தேன்,” என்றார். இதேபோல, ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி, ஆகஸ்ட் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கினார். அதற்குள் நிராகரிப்பு மனு தாக்கல் செய்யாவிட்டால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.