தமிழக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகள் விலக்கம்; மே 11 முதல் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி கலெக்டர் தகவல்

மே 4-ம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற்றுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் 15-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. கடந்த மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப் பெற்றுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் நேற்று (மே 7) காலை முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகின்றன. மாவட்ட கலெக்டரின் மனுநீதி நாள் முகாம் மற்றும் இதர மக்கள் நலத் திட்ட முகாம்கள் மே 7ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெறும்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நடைபெறும் 'மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்' வரும் திங்கள் (மே 11) முதல் வழக்கம்போல் நடைபெறும். தேர்தல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை வரும் திங்கட்கிழமை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.