தமிழக செய்திகள்

தேர்தல் பறக்கும் படை சோதனை: மதுராந்தகத்தில் ரூ.51 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அச்சரப்பாக்கம்,

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலையொட்டி பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.51 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இடைத்தேர்தல்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் பட்டு வாடா செய்வது, பரிசுப் பொருட்களை வழங்குவது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேல்மருவத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வந்தவாசியில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

பறிமுதல்

அதில் ரூ.31 லட்சத்து 30 ஆயிரம் இருந்தது. மேலும் மற்றொரு காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

அதேபோல், அச்சரப்பாக்கம் பஜார் வீதியில் தேர்தல் பறக்கும் படையினர் அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சோத்துப்பாக்கம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் சிக்கியது.

செங்கல்பட்டு மாவட்டம் சோத்துப்பாக்கம் ரோடு அருகே, பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோத்துப்பாக்கம் வழியாக வந்தவாசி நோக்கி, கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த காரை மடக்கி, பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.4 லட்சம் இருப்பதை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம், மதுராந்தகம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. மொத்தம் ரூ.51 லட்சத்து 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT