தூத்துக்குடி,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, இன்று வரை பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பறிமுதல் விவரங்கள்:
ரொக்கத் தொகை: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.83 லட்சத்து 3 ஆயிரத்து 266 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இலவச பொருட்கள்: வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.13 லட்சத்து 71 ஆயிரத்து 671 மதிப்பிலான இலவச பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுபானங்கள்: விதிமீறலாகக் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 44 ஆயிரத்து 499 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி, ஆவணங்களின்றி அதிகப்படியான பணம் அல்லது பரிசுப் பொருட்களை கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்களுடன் பணத்தைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.