தமிழக செய்திகள்

மே 2-ம் தேதி தமிழகம் வரும் தேர்தல் பார்வையாளர்கள்

வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக சட்டசபைக்கான தேர்தல் கடந்த 23-ந்தேதி ஒரே கட் டமாக நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் மக்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடந்த இந்த வாக்குப்பதிவு முடிவில் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத வகையில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.

பதிவான வாக்குகளை எண்ணுவதற்கான தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. அவை அனைத்தும், அங்குள்ள 'ஸ்டிராங் ரூம்' எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைகளை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டன.

வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4,5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு அரணின் முதல் அடுக்கில் எந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு பணிக்காக சுமார் 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு, பகலாக கண்காணிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தினமான வருகிற மே 4-ந்தேதி வரை 62 மையங்களும் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும். வாக்கு எண்ணும் மையங்களுக்குள், செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக மே 2-ம் தேதி தேர்தல் பார்வையாளர்கள் தமிழ்நாடு வர உள்ளனர். 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு தொகுதிக்கு ஒரு பார்வையாளர் என வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தபால் வாக்குகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.