தஞ்சாவூர்,
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். திருவாரூர் தெற்குரத வீதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
திருவாரூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் மாரிமுத்து, நன்னிலம் தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக், மன்னார்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரை ஆதரித்து வாக்குகள் சேகரித்து பேசுகிறார். இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு தஞ்சை சென்ற அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருவாரூர் சென்றார்.
இந்நிலையில் தஞ்சாவூர் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணித்த வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
திருவாரூரில் இன்று மாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். கூட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக திருச்சிக்கு செல்கிறார். அங்கு நாளை(புதன்கிழமை) நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.